Monday, May 6, 2019

சொந்தங்கள் அந்நியமாகியது எவ்வாறு...?

முஸ்லிம்கள் மத்தியில் சில சடங்கு சம்பிரதாயங்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளன. இவற்றை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி நானும் ஒரு காலத்தில் எதிர்த்ததுண்டு. இவற்றில் சில வழக்கொழிந்துவிட்டன.
இதனால் ஏற்பட்ட பாதகங்களை இப்போது உணர்கின்றேன்.

எமது சங்க, இயக்க, ஜமாஅத் கூட்டங்களை நடத்தும்போது நாம் குர்'ஆன் வசனங்களை ஓதி ஆரம்பிக்கின்றோம், து'ஆ ஸலவாத்துடன் நிறைவு செய்கின்றோம். இடையில் சமோசா, பெட்டிஸ், தேநீர்; சிலவேளை சாப்பாடும் உண்டு. இது ஒரு சம்பிரதாயமே அன்றி மார்க்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகள் அல்ல என்பதை யாவரும் அறிவர். பித்துஅத் எதிர்ப்பு கூட்டத்திலும் இந்த சம்பிரதாயம் பேணப்படுவதை நாம் அறிவோம்.
அதுபோல்தான், எதோ ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில், குடும்பங்கள் ஒன்றுகூடின. அப்படி கூடும்போது குர்'ஆன் வசனங்களை ஓதினர், ஸலவாத்துகளை ஓதினர், து'ஆக்களைக் கேட்டனர், குடும்பத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். இதனை நாமோ இவர்கள் எதோ ஹராத்தை செய்வது போன்று பார்க்கிறோம், எதிர்க்கிறோம். அல்லாஹ் இதனை தடை செய்தானா, ரசூலுல்லாஹ் இதனை தடை செய்தார்களா என்று சிந்திப்பதுமில்லை ஆராய்வதும் இல்லை.
இதன் விளைவு... குடும்ப ஒன்றுகூடல்கள் அருகிவிட்டதனால் சொந்தங்களும் அந்நியமாகின.

Sunday, May 5, 2019

ஒரே ஆயுதம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே


ஒவ்வொரு முறையும் இஸ்ரேலினால் பாலஸ்தீனம் தாக்கப்படும்போது இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிப்போம் என்ற கோஷம் ஒலிப்பதும் பிறகு மறைவதும் சகஜமாகிவிட்டது. 

இஸ்ரேலிய பொருட்களை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்கவும்தான் செய்கின்றனர். ஆயினும், இஸ்ரேலின் அடாவடித்தனம் குறைந்தபாடில்லை. ஏனெனில், இதனால் ஏற்படும் நட்டத்தை அமெரிக்கா ஈடு செய்துவிடும். 

ஆகவே இந்த பகிஷ்கரிபுக்களால் ஜியோனிச நாய்களை வழிக்குக்கொண்டுவர முடியாது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும். 

இஸ்ரேலை மட்டுமல்ல இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், இவர்கள் ஷியா, சுன்னி பிரிவினைக்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது எமது முஸ்லிம்களுக்கு புரியவில்லையே என்பதை நினைக்கும்போது வேதனையாய் இருக்கின்றது.

நல்லாட்சியை நோக்கி..............

நாட்டில் லஞ்சம், ஊழல், மோசடி, நெருங்கியவர்களுக்கு சலுகை வழங்குதல், அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி, அரசின் பொறுப்புக் கூறலை அதிகரிக்கச் செய்து, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, நல்லாட்சி போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். மக்கள் சேவைக்காகத்தான் இவர்கள் இவ்வளவு கஷ்டப் படுகின்றனர் என்று நினைப்போமானால் எம்போன்ற முட்டாள்கள் யாருமில்லை.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரசியல் திட்டத்தின் படி .......... 
"எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது".
துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஜனாதிபதி பிரேரிப்பார். 
பாராளுமன்றம் இவர்களின் தகுதி, தராதரம், அனுபவம், ஒழுக்கம் அனைத்தையுமே பரிசீலனை செய்து, நியமனத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவரால் அமைச்சுப் பதவி விகிக்க முடியும்.

இந்த அரசியல் முறை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பின்பற்றப் பட்டால், நிச்சயமாக, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக தேர்தலில் போட்டியிட நினைப்போர் தொகையும் குறையும்; தேர்தல் கால வன்முறைகளும் குறையும். திறமையானவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கான வழியும் ஏற்படும்.

Saturday, May 4, 2019

இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான சவூதி அரேபியாவின் முடிவு...!

சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான முடிவை எப்போதோ எடுத்துவிட்டது.

இதனை செயற்படுத்துவது இலேசான காரியமல்ல என்பதையும் உலக முஸ்லிம்கள் மத்தியில் தமக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதையும் சவூதி அறிந்து வைத்திருந்தது.

தனது திட்டத்தை நிறைவேற்ற நாட்டு மக்களையும் உலக முஸ்லிம்களையும் முதலில் மூளைச் சலவை செய்தால் ஒழிய இதனை நடைமுறைப்படுத்துவது இலேசானதல்ல என்பதை அது அறியும்.

இத்திட்டத்துக்கு தடையாய் இருப்பர் என்று சந்தேகப்பட்ட தலைவர்கள் - சதாம் ஹுசைன், முஅம்மர் கத்தாபி - கொல்லப்பட்டனர்; டாக்டர் முர்ஸி பதவி நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், பஷார் அல்-அஸாத்தை வீழ்த்தும் முயற்சிகள் தொடர்கின்றன.

இஸ்ரேலுக்கு எதிரான சக்திகள் - ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ், சகோதரத்துவ இயக்கம் போன்றன - பயங்கவாத முத்திரை குத்தப்பட்டு, தடைசெய்யப்பட்டன.

அதேசமயம் பயங்கரவாத இயக்கங்கள் - தலிபான், அல்கய்தா, அந்நுஸ்ரா, அஸ்-ஷபாப், போகோஹறாம், ஐசிஸ் - அவர்களாலேயே  உருவாக்கப்பட்டன.

இஸ்லாமிய உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி, பெண்களைக் காட்டி, போதையூட்டி, அவர்களின் அழிவுக்கு சவூதி வழிவகுத்தது. (பாவம் அந்த மூளைச்சலவை செய்யப்பட்ட துடிப்புள்ள இளைஞர்கள்).

சவூதி நாட்டிலுள்ள பெருமளவிலான உலமாக்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டில் எதிர்ப்புக்குரல் அனைத்தும் அடக்கப்பட்டது.

ஷீ'ஆ முஸ்லிம்களை விட யூதர்கள் மேலானவர்கள் என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டது; ஈரானின் விஸ்தரிப்பு வாதம் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டது.

தமது படியளப்பிலுள்ள "இஸ்லாமிய" இயக்கங்கள் இவர்களது இந்த பிரசாரத்துக்கு உடந்தையாக்கப்பட்டன. பணத்தைக் கண்டால் பல்லிளிக்கும் பச்சோந்திகள் எங்கும் உள்ளனர் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எழுச்சிக் குரலாக இருக்க வேண்டிய "இஸ்லாமிய" இயக்க பிரசுரங்கள் அவர்களது ஊது குரல்களாக மாறின.

எல்லாமும் செய்தாகிவிட்டது. களமும் அமைத்தாகிவிட்டது. மைந்தரை முற்படுத்தி மன்னரே எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.

இப்போது அவர்களுக்கு பெரும் தடையாய் இருப்பது ஈரான் இஸ்லாமிய குடியரசு மட்டுமே. அதற்கெதிரான பாரிய அளவில் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பார்ப்போம்.

சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

பௌத்த மதஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

அமேரிக்கா, முஸ்லிம் நாடுகளை அழிக்கும் தமது தேவையை நிறைவேற்ற தமது பிரஜைகளில் சிலரை இழந்தாவது முஸ்லிம்கள் மீது பழியைப் போடத் தயங்குவதில்லை.
அதுபோல், இங்குள்ள சில முஸ்லிம் விரோத இன வெறியர்களும் நடந்துகொள்ளக் கூடும். ஆகவே பௌத்த மதஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், குறிப்பாக வெசாக் பண்டிகை தினங்களில்.

இமாமத் இருக்குமாயின்...!

இலங்கையில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் வழிகெட்ட வஹாபிகள் சிலர். அதனை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டித்தனர்.

எனினும் சிலர் (பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் அல்ல) இந்த பயங்கரவாத செயலுக்கு முழு முஸ்லிம் சமூகமும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாமுமே காரணம் என்பது போல கதையளக்கின்றனர்; மத்ரஸாக்கள் மூடப்படவேண்டும், பள்ளிவாசல்கள் மூடப்படவேண்டும், முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப்படவேண்டும், தனித்துவ ஆடைகளை அணியக்கூடாது என்றெல்லாம் பிரசாரங்கள் மேற்கொள்கின்றனர்; அதற்கு ஊடகங்கள் சிலவும் துணைபோகின்றன.

விட்டுக்கொடுத்து, சமரசமாக செல்லவேண்டும் என்று போதிப்பதிலேயே எமது உலமா சபை அங்கத்தவர்களும் அரசியல்வாதிகளும் கடும் பிரயாசை எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த படுபாதக செயலுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பல்ல, அதனால் நியாயமற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது, எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்று தைரியமாக கூறக்கூடிய உறுதியான தலைமைத்துவம் இல்லையே என்று கவலைப்படுகிறேன்.

இமாமத் இல்லையென்றால் எல்லோரையும் நாமே அனுசரித்துச் செல்லவேண்டும்.

இமாமத் இருக்குமாயின் எல்லோரும் எம்மை அனுசரித்துச் செல்லவேண்டும்.